Monday, October 12, 2015

சாத்தியம்

IndiBlogger - The Indian Blogger Community அப்படி இப்படி 
கோடு இழுத்தேன் 
சித்திரம் ஆனது 
அங்கே இங்கே 
வண்ணம் தீட்ட 
ஓவியம் பிறந்தது 
புள்ளியை இணைக்க 
கோலம் மலர்ந்தது 

உயிரும் மெய்யும் 
எழுத்தாய் கோர்த்து 
எண்ணம் சேர்த்தேன் 
எழுந்தது கவிதை 
ஓரெட்டு ஈரெட்டு 
எடுத்து வைத்தேன் 
ஓடத் துவங்கினேன் 
பந்தயம் வென்றேன் 

அரிசியும் பருப்பும் 
வேக வைத்தேன் 
காயை அரிந்தேன் 
உப்பும் காரமும் 
சேர்த்து அவித்தேன் 
கடுகும் உளுந்தும் 
தாளித்து இறக்க 
மணந்தது விருந்து 

‘அ’னா ‘ஆ’வன்னா 
சொல்லிக் கொடுத்தேன் 
விரலைப் பிடித்து 
நடக்க வைத்தேன் 
வாமனன் வளர்ந்து 
உலகை அளக்கிறான் 
என் செல்ல மகன் 
இனி செல்வ சீமான் 

ஆசை ஆர்வம் 
ஊற்றாய் கண்டேன் 
என்னால் முடியும் 
என்று நினைத்தேன் 
எடுத்த காரியம் 
நிறைவாய் முடித்தேன் 
அஞ்சாமல் வாழ்ந்தேன் 
அது போல் இறப்பேன் 

நல்லது கெட்டது 
யாவும் தெரிந்தது 
நடந்த பாதையில் 
நாலும் நடந்தது 
உள்ளே வெளியே 
முற்றும் புரிந்தது 
பற்றும் துறவும் 
பதமாய் கலந்தது 

கனவே கருவாய் 
கற்றது எருவாய் 
துணிவே துணையாய் 
தூய்மை அணியாய் 
அதிராமல் நடந்திட 
அயராமல் முயன்றிட 
எங்கும் சத்தியம் 
எல்லாம் சாத்தியம் 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community