Monday, October 12, 2015

பந்தம்

IndiBlogger - The Indian Blogger Community காட்டுக்குள்ளே திருவிழா 
கதம்ப மணங்களின் ஓருலா 
தென்பட்டது தேவலோகம் 
உள்ளேயது கொலைக்களம் 
அழைத்தது அரியணை 
அடைந்தது தண்டனை 

புலன்களின் பெருவிழா 
புவிக்கது புனர் வாழ்வு 
புதுப்புனலின் வேகம் 
புரியாது நீளும் தடம் 
திக்குத் தெரியாத காடிது 
திகைப்பும் திகிலும் கூடுது 

மானின் விழிகள் அவளுக்கு 
மருண்டு போனதோ நானே 
மீன்கள் போடுமோ தூண்டில் 
மீனாய் பிடித்தாள் என்னை 
தாலி நான் கட்டினேன் 
தறியில் எனை கட்டினாள் 

முள்ளாய் குத்துவாள் 
மலராய் வருடுவாள் 
முழுதான முரண்பாடு 
முடியாத ஒரு விருந்து 
கட்டெறும்பா கனிமரமா 
கால்விலங்கா இரு சிறகா 

குறுக்கும் நெடுக்கும் ஓட்டம் 
தோற்றுப்போகும் ஆட்டம் 
அடுத்து நகர்த்தும் காயெது 
அவள் ஆயுதங்கள் பல நூறு 
மன்னன் நகர்வது மெல்லவே 
மகராணி பாய்வது பல திசை 

கண்ணி வைத்து காத்திருக்கும் 
கருணையில்லா வேட்டைக்காரி 
விழுந்த இரையுடன் விளையாடி 
விருந்துண்ணும் வினைகாரி 
புலன்களில் கரைந்திடும் புதிர் 
புதைந்திருக்கும் பல விடை 

முறைத்து எனைப் பார்ப்பாளா 
முத்தாய் கண்ணீர் உகுப்பாளா 
கேள்விக்கணை தொடுப்பாளா 
மௌனத்தால் கொல்வாளா 
அடித்தால் அடங்குவாளா 
அணைத்தால் குளிர்வாளா 

ஒட்டி நடப்பதில்லை 
ஒதுங்க விடுவதில்லை 
யுத்தம் நிற்கவில்லை 
எளிய விதிகளில்லை 
புத்திக்கு புரியவில்லை 
யுத்தியும் பலிப்பதில்லை 

திங்களும் ஞாயிறும் அவளே 
தினமும் மாறும் வானிலையே 
கைகட்டி வாய்மூடி நின்றாலும் 
பெட்டிப் பாம்பாய் ஆனாலும் 
புயல் மழை நிற்பதில்லை 
புழுக்கமும் தீர்வதில்லை 

மெய்யெது பொய்யெது 
காட்சியும் கருத்தும் வேறா 
பின்னிப் பிணைந்த நெஞ்சிலே 
பிள்ளைக் கோபம் எழுவதேன் 
ஒன்று கலந்த உயிரிலே 
வாட்டி வதைக்கும் ஊடலேன் 

இல்லற வன்முறைகள் 
ஈர்க்கின்ற இம்சைகள் 
ஏடறியா இலக்கணங்கள் 
மனம் மகிழும் சுகந்தங்கள் 
விடுதலையில்லா ஒரு சிறை 
விருப்பமானதே இத்தளை 

விந்தையோ விசித்திரமோ 
வேதாந்த அரிச்சுவடியோ 
மாயச் சுழலிதுவோ 
மீளும் வழியெதுவோ 
மிச்சமுள்ளதே ஆசை 
உழல்வதும் சுகமானதே 

துருவங்களின் காந்தம் 
இரு மனங்களின் பந்தம் 
கவிதை பாடும் சந்தம் 
காவியமாகும் சொந்தம் 
தழைக்கின்றது நித்தம் 
மானிடமெனும் விருட்சம் 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community