Monday, October 12, 2015

வாலிப சமுதாயமே

IndiBlogger - The Indian Blogger Community நல்லதை பாராட்டி அல்லாததை ஓரங்கட்டி 
நடுநிலை மாறா நியாயமெங்கே காணவில்லை 
நச்சென்று பல கருத்தை நல்ல மூதுரையை 
நாட்டுப்புற சொல்வழக்கில் பழமொழிகளில் 
வயக்காட்டு உரமென்று நினைவூட்டிய 
வசவோடு மறக்காது அன்பை கூட்டிய 
அருமையான பாட்டிகள் இன்றில்லை 
ஆதரவாய் வழிநடத்த இங்கு ஆளில்லை 

முன்னம் வகுத்த முறையிலே குறையென்பர் 
முழுதாய் உட்பொருள் அறியாதுளறும் பித்தர் 
அழகான வாதங்களை அடுக்குகின்ற எத்தர் 
அரிசியை வீசிவிட்டு உமியை உண்ணச்சொல்வர் 

இன்பத்தேனாய் செந்தமிழ் காதில் பாயவில்லை 
இன்றோ கூக்குரலே கூச்சலே கானமானது 
ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு ஆமாம் 
ஐயா ராகுவும் கேதுவும் விடாப்பிடியாகவே 

மாற்றான் தோட்டத்து மல்லிகை மணத்தை 
முகர்ந்து திரிதல் முதலான நாகரிகமின்று 
மாதவிகள் எங்கும் பெருகிவிட்ட காலமிது 
மேதாவிகளவரை பாராட்டிடக் காணீர் 

பைசாச குணங்களின் நிழற்படங்கள் 
பொன்முலாம் பூசிய பித்தளைகள் 
நிலைகெட்ட மாந்தரின் வக்கிரங்கள் 
இருட்டு மனிதரின் திருட்டுத்தனங்கள் 
விடம் கொண்ட அழகிய நாகங்கள் 
நெறியில்லா வாழ்வின் பிம்பங்கள் 

தமக்கையின் காதலனை மணக்கும் தங்கை 
தாயும் மகளும் ஆகிடுவர் சக்களத்திகள் 
காதலனின் சிற்றன்னையாகிடுவாள் காதலி 
காமுகனின் கருவை சுமக்க ஒருத்தி சவால் 
மலடிக்கு துரோகி தருவாள் மகவை பரிசாய் 
மோகத்தின் வழி செல்லும் மகத்தான காலம் 
இலக்கணம் மாறும் இலக்கியம் பிறக்கும் 
இதுவரை இல்லாத புதுப் புது அர்த்தங்கள் 
புது மரபுகள் அரங்கேறும் தொடர்கதைகள் 
பல உறவுகள் புரியாத கேள்விக்குறிகள் 

புரட்சி மழை பருவகாலமின்றி பேயுது 
புரட்டிப்போடுது பருவ வயது நியதிகளை 
அசிங்கம் இன்று ஆராதனை காணுது 
அலங்காரமாய் ஊர்வலம் வருகுது 

நியாயங்களின் நினைப்பொழிந்து 
சிந்திக்கும் மனிதகுல சிறப்பழிந்து 
பட்டறிவை பகுத்தறிவை புறந்தள்ளி 
பொருந்தாத புதுமைகள்தனை நாடி 
விலங்கின் புலன் நிலைக்கிறங்கி 
வழி தவறி வலி தேடி வலுவிழந்து 
இச்சைகளின் இரையாவதேனோ 
இது தகுமோ தலைகுனிவல்லவோ 
மந்தமேன் மந்தை போல் ஆனதேன் 
மதியின்றி விட்டில்பூச்சியாய் மடிவதேன் 

கல்தூணை சாய்த்துவிட்டால் 
கட்டிடம்தான் நிற்குமோ 
எதிர்காலம்தனை சுமக்கும் 
ஏறுகள் இப்படி ஏமாறலாமோ 
கண்ணான கண்ணியமிழந்துவிட்டால் 
தகைமையொளி காணாமல் போகாதோ 
இன்றோடு முடிவதோ வாழ்க்கை 
தன்னோடு ஒட்டாததோ உலகம் 
சிகரங்கள் எட்டும் கனவுகளின்றி 
சிங்கங்கள் இளைத்துப்போவதோ 
கட்டுப்பாடெனும் கவசம் தொலைத்து 
காய்கள் பிஞ்சில் பழுத்து வெம்புவதோ 
கல்லும் முள்ளும் காலில் இடறிட 
காயப்பட்டு நிலைகுலைந்து நிற்பதோ 
துரத்துவது கானலையென அறியாமல் 
தீராத தாகத்தில் விக்கித்தவிப்பதோ 

வேட்கையின் அவசரம் சறுக்கலின் ஆரம்பம் 
விவேகத்தின் வெளிச்சம் விடுதலை காட்டும் 
விழித்துக்கொள்வாய் வாலிப சமுதாயமே 
வீணாய் போவதற்கோ மானிடப்பிறவியிது

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community