Monday, October 12, 2015

புது யுகம்

IndiBlogger - The Indian Blogger Community அதிசயம்தானது 
அனுதினம் பார்ப்பது 
பருவத்தில் மலருது 
பால் போல் பொங்குது 
பாடாய் படுத்துது 
பாட்டாய் பாடுது 

தூக்கத்தை கெடுக்குது 
துக்கத்தில் வாட்டுது 
இமைகள் வழியாக 
இதயம் நுழைந்தவளை 
எண்ணியே வாடுது 
புண்ணாய் மனமுமே 

கடைக்கண் பார்வைக்கு 
கடுந்தவம் நடக்குது 
கம்பனும் காளிதாசனும் 
காணாத கற்பனை 
கொட்டுது கவிதையாய் 
கெட்டது பிற சிந்தனை 

பெற்றோர் பெரிதில்லை 
பிறந்த குடி பொருட்டில்லை 
காதலே மூச்சாய் 
கடையாணி அச்சாய் 
காலம் கரைந்திட 
ஞாலம் மறந்திட 

அலுக்காது காத்திருந்து 
அணு அணுவாய் செத்திருந்து 
செத்துப் பிழைத்தெழுந்து 
பித்தாகி வரம் கேட்டு 
அடைவான் ஆனந்தம் 
முடிவாய் ஒரு நாளிலே 

முடிந்திடும் ஒரு சகாப்தம் 
தொடங்கிடும் மறு அத்தியாயம் 
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து 
அக்னி அதனை வலம் வந்து 
அடியெடுத்து சதிபதியாய் நடந்தவர் 
அடுத்து நடப்பதை எதிர்பாராதவர் 

பூமாலை சுமந்த தோளில் 
பாரமாய் அமரும் கடமை 
அரசனாய் ஆண்டு பழகியவனுக்கு 
அடுப்படியில் மெத்த பணியிருக்கு 
மங்கைக்கு மாதாந்திர தொல்லை 
மற்றும் மசக்கை மகப்பேறு 

அலுவலக பணியோடு 
அலுப்பாகுது அன்றாடம் 
எல்லைகள் எழும்புது 
தொல்லைகள் அத்துமீறல்கள் 
அவரவர் உரிமைகள் 
அங்கில்லை பொதுமைகள் 

பார்வைகள் எரிக்குது 
வார்த்தைகள் தடிக்குது 
நாணலாய் வளையாமல் 
கோணலாகுது சிந்தனை 
காத்திருந்து பறித்த கனி 
கசந்துதான் போகுது 

மணமாலை வாசம் மறந்து 
மழலைகள் நலன் துறந்து 
பொறுமையெனும் சொல்லொழிய 
வெறுமையான உறவாக்கி 
முக்கால பந்தம் இன்று 
முறிந்தே தான் போகுது 

பாட்டியை பூட்டியைப் போல் 
வீட்டிலடைக்க முடியாதிவளை 
குடிப்பவனை அடிப்பவனை 
கூத்தியாளை கொண்டவனை 
தெய்வமாய் கொண்டாடிய 
செய்தி இன்று பழைய கதை 

தன்னிரு காலில் நின்றிடுவாள் 
தனியாய் வாழ்ந்து காட்டிடுவாள் 
நாலும் கற்றறிந்த நங்கைக்கு 
நாளைக்கு மீண்டும் வசந்தமுண்டு 
புது யுகம் இதோ பிறந்திருக்கு 
எதுவெதுவோ இனி நடந்திருக்கும் 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community