Saturday, February 9, 2013

சுனாமி-பாகம் 2

IndiBlogger - The Indian Blogger Community அம்மி, உரல், திரிகல் போய் மிக்ஸி, கிரைண்டர் வந்த மாதிரி சுக்கு, மிளகு, திப்பிலி போய் மாத்திரைகள், மருந்துகள், களிம்புகள் வந்துவிட்டன. அன்று அல்லோபதி அவ்வளவாக அறியப்படாத காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அலமாரி தட்டொன்றில் எளிய மருத்துவ சாமான்கள் இருந்தன. ஜாதிக்காய், மாச்சக்காய், பேர் சொல்லாதது(சுட்ட வசம்பு) உரசி ஊட்டி வளராத குழந்தையில்லை. கையில் பூலாங்கிழங்கு கட்டி வைத்தோம், வாந்தி, மந்தம் கட்டுப்படுத்த. யாருக்கும் வாய்ப்புண் என்றால் மாச்சக்காயை உரசி தடவினோம். ஓமவல்லி செடியின் இலைகளை இருமலுக்கு மருந்தாக்கினோம். வாய் ஓயாத இருமலும் பனங்கல்கண்டுக்கு பயந்தது. அடிபட்டு ரத்தக்கட்டு, வீக்கம் என்றால் நாமக்கட்டியை அல்லது கரம்பல்(களிமண்) கட்டியை உரசி பூசினோம். ஓமமும் விரலி மஞ்சளும் தூளாக்கி சாம்பிராணியோடு சேர்த்து புகை பிடித்து தலையில் கோர்த்த நீரை வற்றச் செய்தோம். வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி லேசாக சூடு காட்டி வேனக்கட்டி மேல் வைத்து குணமாக்கினோம். நம் கையிலே எத்தனை எளிய மருந்துகள் இருந்தன. உங்கள் குடும்பத்தில் ஒவ்வாமை சரித்திரம் இருக்கிறதா அப்படியானால் நோ பூலாங்கிழங்கு, மஞ்சள் கலந்த குளியல் பொடி என்கிறார் குழந்தை வைத்திய நிபுணர். இன்று வெற்றிலை போடும் பழக்கம் இல்லை- அது புற்றுநோய் வரவழைக்குமென்று அந்த ஆரோக்கியமான பழக்கத்திற்கு தடா. இன்றும் என் மாமியார் வீட்டு அலமாரியில் வயிற்று உபாதைகளுக்கு ஒரு பாட்டிலில் சுக்குப் பொடியும் இன்னொன்றில் மங்குஸ்தான் தோல் பொடியும் இருக்கிறது. என் வீட்டு தோட்டத்தில் இன்றும் ஓமவல்லி செடி இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இவை தொடராது. பழைய பிரியத்தில் அவற்றை பழகியவர்கள் அவற்றை வைத்திருக்கிறோம். பழைய எளிய மருந்துப் பொருட்களை கண்ணாலும் கண்டிராத இளைய தலைமுறையினர் பாவம் என்ன செய்வார்கள். எத்தனை டாக்டர்கள், ஆஸ்பத்திரிகள், சோதனைக்கூடங்கள், மருந்துக்கடைகள்! எத்தனை விளம்பரங்கள், வலி நிவாரணிகள், எத்தனை அலர்ஜி எச்சரிக்கைகள்! இந்த மாற்றம் சரிதானா, பழையதை துறந்ததில் இழந்தது என்ன என்று சிந்திப்பது அடித்துப் போட்டுவிட்ட நவீன மாற்ற சுனாமிக்குப் பின் ஒரு வியர்த்தமான வேலையென்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community